About Me

BIMSTEC Short Notes (பிம்ஸ்டெக் கூட்டமைப்பு)

BIMSTEC

தோன்றிய வரலாறு:

வங்கக் கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் தங்களுக்குள் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்ந்தன. எனவே வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் 1997ம் ஆண்டில் ஒன்றிணைந்து வெளியிட்ட பாங்காங் பிரகடனத்தை அடுத்து “BIST-EC” எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து இவ்வமைப்பில் மியான்மர் சேர்ந்து கொண்டபோது “BIMST-EC” என்றானது. 2004 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நேபாளம் பூட்டான் இவ்வமைப்பில் இணைந்தன. இதனைத் தொடர்ந்து 2004 ஜூலை மாதம் பாங்காங் நகரில் நடைபெற்ற “BMIST-EC” முதலாவது மாநாட்டில் இவ்வமைப்பின் பெயர் Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டது. இவ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஆங்கில அகர வரிசைப்படி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சுழற்சிமுறையில் 2 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் நிரந்தர தலைமையகம் வங்கதேசத்தில் திறக்கப்பட்டது. இதற்கான பட்ஜெட்டில் 33 சதவீதத்தினை இந்தியா வழங்கியது.

பிம்ஸ்டெக் கூட்டமைப்பானது வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து,பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஒரு பிராந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டது.

நோக்கங்கள்:

 • வணிகம், முதலீடு, தொழிற்சாலை, தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, சுற்றுலா, வேளாண்மை, ஆற்றல்,உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் பொருளாதார மேம்பாட்டிற்காக சூழலை ஏற்படுத்துதல்.
 • சமத்துவம் மற்றும் கூட்டு அறிவின் மூலம் இப்பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல்.
 • பொருளாதாரம், சமூகம்,தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் கூட்டுறவையும் பரஸ்பர உதவியையும் மேம்படுத்துதல்.
 • கல்வி,தொழில் மற்றும் தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளில் உறுப்பு நாடுகள் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல்.
 • வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து,தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்றவை மேம்படுத்தும் வண்ணம் உறுப்பு நாடுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இதர அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது,
 • நோக்கங்கள் மற்றும் கொள்கையில் தம்மை ஒத்துள்ள பிற சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் நெருங்கிய மற்றும் பயனுள்ள வகையிலான உறவினை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

விதிகள்:

 • பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பது சமத்துவ இறையாண்மை, எல்லைப்புற ஒருமைப்பாடு, அரசியல் ரீதியிலான சுதந்திரம் உள்விவகாரங்களில் தலைமை, இருதரப்பு நன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
 • பிம்ஸ்டெக் அமைப்பிற்குள்ளான ஒத்துழைப்பு ஆனது உறுப்பு நாடுகளுக்கிடையேயான பிரத்தியேக உறவுடன் கூடுதலான ஒரு உறவு மட்டுமே.

முக்கியத்துவம்:

பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையையும் ஏறத்தாழ இந்திய மதிப்பில் ₹3 ட்ரில்லியன் மதிப்பிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. சுமார் $100 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் சந்தையாகவும் உள்ளது. மேலும் பாகிஸ்தானின் முட்டுக்கட்டைகளால் சுணக்கம் அடைந்துள்ள தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பிற்கு (SAARC) மாற்றாக பிம்ஸ்டெக் செயல்படுகிறது. இவ்வமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக இல்லாததால் சார்க் அமைப்பில் ஏற்படுவது போன்று தேவையற்ற சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படுவது இல்லை. ஏற்கனவே முதன்மை நோக்கமான பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வமைப்பு இந்தியாவின் கிழக்கு நோக்கி (Look East)” எனும் வெளியுறவுக் கொள்கை மற்றும் தாய்லாந்தில் மேற்கு நோக்கி (Look West)” எனும் கொள்கை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.மேலும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவானது வர்த்தகம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மேம்பட்டு வருகிறது.

சவால்கள்:

பிம்ஸ்டெக் அமைப்பு ஒரு நிதியுதவி வழங்கும் அமைப்பாக அல்லது இதர உதவிகளை வழங்காமல் ஒரு சாதாரண நெறிப்படுத்தும் குழுவாக மட்டுமே செயல்படுகிறது. இவ் அமைப்பின் உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியில் மிகுந்த ஏற்றத்தாழ்வுடையதாகத் திகழ்கின்றன. ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான சீனாவின் ஆதிக்கம் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் மீது அதிகமாக உள்ளதும் இவ் அமைப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும். இவ் அமைப்பின் உறுப்பு நாடுகள் தாங்கள் உறுப்பினர்களாக உள்ள பிற பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை பிம்ஸ்டெக்கிற்கு அளிப்பதில்லை. ஆனாலும் இந்தியாவின் முயற்சியால் சமீபகாலமாக இவ் அமைப்பு முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

இந்தியாவில் அமைந்துள்ள பிம்ஸ்டெக் மையங்கள்:

 • பிம்ஸ்டெக் தகவல் மையம் புதுடெல்லி
 • பிம்ஸ்டெக் சுனாமி எச்சரிக்கை மையம் நொய்டா
 • பிம்ஸ்டெக் ஆற்றல் மையம் பெங்களூரு
 • பிம்ஸ்டெக் பாரம்பரிய மருத்துவ வலையமைப்பு - ஆயுஷ் அமைச்சகம் தலைமையகம், புதுடெல்லி.

Post a Comment

0 Comments